வாட்ஸ்அப்பில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வீடியோ கால் ஷேரிங் அம்சத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
வாட்ஸ்அப் செயலி மிகுந்த பாதுகாப்பானது, பயனர்களின் தரவை யாரும் பார்க்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள அப்டேட்டுகளில் சிலவற்றில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
குறிப்பாக அண்மையில் வந்த வாட்ஸ்அப் வீடியோ கால் லிங்க் ஷேரிங் (Video Call Link Sharing) என்ற அம்சத்தால், லட்சக்கணக்கான பயனர்களின் மொபைல் எண்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை குறித்து ஆய்வு செய்து வரும் அவினாஷ் ஜெயின் என்பவர் இந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இவர் ஏற்கெனவே நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் இணையதளங்களில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்தவர்.
வருகிறது புது அப்டேட்.. WhatsApp-ல் இனி இந்த வசதி கிடையாது!
அவினாஷின் கூற்றுபடி, கூகுளில், பிங் போன்ற தளங்களில் சாதாரணமாக தேடினாலே வாட்ஸ்அப் வீடியோ காலில் லிங்க் மூலமாக சேர்ந்த லட்சக்கணக்கான வாட்ஸ்அப் பயனர்களின் நம்பர் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாட்ஸ்அப் பாதுகாப்பு குழுவிற்கு ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளதாகவும், அதற்கு இது பொதுவான மென்பொருள் கோளாறு தான் என்று வாட்ஸ்அப் விளக்கமளித்தாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அவினாஷ் மீண்டும் வாட்ஸ்அப்பில் உள்ள பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அவற்றில் இருந்த சிக்கல்களை வாட்ஸ்அப் நிறுவனம் சரிசெய்துள்ளது.
அதாவது, ஒரு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் ஒப்புக் கொள்ளலாமல், சத்தமில்லாமல் அந்த குறைபாட்டை சரிசெய்து வருவதாக அவினாஷ் கூறுகிறார்.
இவை ஒருபுறம் இருந்தாலும், வாட்ஸ்அப்பில் உள்ள பாதுகாப்பின் அம்சங்களின்படி, ஒரு பயனருக்கு அவர் பயன்படுத்தும் மொபைல் எண்னை பொதுவெளியில் கிடைக்கச் செய்யாதாவாறு கட்டமைக்க முடியும். இதற்கான அதிகாரம் பயனர்களிடத்தில் உள்ளது.
எனவே, ஒரு பயனர் நினைத்தால் அவரது தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பாக வைக்க முடியும். அந்த வகையில், வீடியோ காலிங் அம்சத்தில் தேவையில்லாத அழைப்புகளை ஆஃப் செய்து வைக்க முடியும், பிளாக் செய்யவும் முடியும்.
மத்திய அரசின் தகவல்தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23 லட்சம் கணக்குகளை இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியது. இவற்றில் 8.72 லட்சம் கணக்குகளுக்கு எதிராக புகார்கள் வருவதற்கு முன்பே, வாட்ஸ்அப் நிறுவனம் தாமாக முன்வந்து முடக்க நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.