Benz EQS SUV : மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய EQS எஸ்.யு.வி. மாடலின் சர்வதேச வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS எஸ்.யு.வி. மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS ஏப்ரல் 19 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு ஃபிளாக்ஷிப் EQS செடான் மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது எஸ்.யு.வி. மாடல் அறிமுகமாக இருக்கிறது. மேலும் புதிய பென்ஸ் EQS எஸ்.யு.வி. வெளியீட்டை தொடர்ந்து பீஜிங் மோட்டார் விழா துவங்க இருக்கிறது.
இந்த எஸ்.யு.வி. மாடல் EVA2 பிளாட்ஃபார்மை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்ம் EQS செடான் மாடலிலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய EQS எஸ்.யு.வி. மாடலில் இரண்டாவது ரோவை எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலில் மூன்றாவது ரோ விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS எஸ்.யு.வி. மாடலின் தொழில்நுட்பங்களும் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய பென்ஸ் எஸ்.யு.வி. மாடலில் 56 இனஅச் MBUX ஹைப்பர் ஸ்கிரீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இது காரின் முழுமையான டேஷ்போர்டு போன்று செயல்படுகிறது. முன்புற பயனர் இருக்கையில் 12.3 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஆன்லைனில் ஸ்டிரீமிங் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த காரின் உள்புற கேமரா ஓட்டுனர் ஸ்கிரீனை பார்க்கிறாரா என்பதை தானாக கண்டறிந்து அதற்கு ஏற்ப ஸ்கிரீன் பிரைட்னசை அட்ஜஸ்ட் செய்யும். வழக்கம்போல் புதிய பென்ஸ் மாடலிலும் கேபின் லெதர் மற்றும் மரத்தால் ஆன பாகங்களால் அழகூட்டப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கேபின் நிறங்களை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் விரும்பினால் ரியர் சீட் எண்டர்டெயின்மெண்ட் பேக்கஜ் பெற்றுக் கொள்ளலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் EQS எஸ்.யு.வி. மாடலின் வெளிப்புறம் முழுமையாக வெளியிடப்படவில்லை. எனினும், இந்த எலெக்ட்ரிக் கார் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதற்கான பேட்டரிகளும் இதே ஆலையில் இருந்து வழங்கப்பட இருக்கின்றன.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் சமீபத்தில் தனது எஸ் கிளாஸ் மேபேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும் ஃபிளாக்ஷிப் EQS செடான் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்யப் போவதாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. எனினும், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.