கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தளம் திடீரென முடங்கியது. சுமார் இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு மின்னஞ்சல் சேவைகள் மீண்டும் இயங்கியது.
உலகம் முழுவதும் சுமார் 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஜிமெயில் மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப் செயலிகளில் ஜிமெயிலும் ஒன்றாகும். இந்த நிலையில், ஜிமெயில் சேவைகள் திடீரென முடங்கியது. ஜிமெயில் வலைதளம் மற்றும், செயலிகள் இரண்டிலு நின்று விட்டது.
கூகுள் வொர்க்ஸ்பேஸில் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஜிமெயில் சர்வீஸில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டது. அதாவது சேவை முடங்கியுள்ளது என்பதற்கு அடையாளமாக சிவப்பு காட்டப்பட்டது. அதே நேரத்தில் கூகுளின் பிற சேவைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் தோன்றியது.
இது தொடர்பாக கூகுள் வொர்க்ஸ்பேஸின் முகப்பு டாஷ்போர்டு பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 'கூகுள் வொர்க் ஸ்பேஸின் ஒரு பகுதியாக சேவை நிலை விவரங்கள் இந்தப் பக்கத்தில் காட்டப்படும். கீழ்க்கண்ட சேவைகளின் தற்போதைய நிலையை அறிய சிறிது நேரம் கழித்து மீண்டும் இப்பக்கத்திற்கு வரவும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் இங்கு பட்டியலிடப்படவில்லை எனில், உதவிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். இந்த டாஷ்போர்டில் என்னென்ன போஸ்ட் செய்யப்படும் என்பது குறித்து அறிந்துகொள்ள, எங்களது https://workspace.google.com/ தளத்திலுள்ள FAQ பகுதியைப் பார்க்கவும்' என்று அறிவிக்கப்பட்டது.
இணையதளங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் டவுன்டெடக்டர் என்ற தளத்திலும் கூகுள் சேவை முடக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 10 ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு ஜிமெயில் சேவைகள் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இரவு 8.28 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
ஜிமெயில் திடீரென முடங்கியதையடுத்து, பயனர்கள் அடுத்தடுத்து டுவிட்டரில் டுவீட் செய்தனர். இதனால் #GmailDown என்ற ஹேஷ்டெக் டுவிட்டரில் வைரல் ஆனது.