
நடிகரும், தவெக தலைவருமான விஜய், இன்று நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நாகை மாவட்டத்தில் எந்த ஒரு பணியையும் செய்யவில்லை என்று கூறி திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுக அரசு தனக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறிய அவர், இதை கண்டு தான் பயப்படும் ஆள் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.
முன்னதாக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், அங்கு இருந்து நாகை மாவட்ட எல்லைக்கு காரில் வந்தார். பின்பு அங்கிருந்து தனது பிரசார வாகனம் மூலம் பிரசாரம் செய்ய இருந்த நாகை புத்தூர் அண்ணா சிலை அருகில் வந்தார். விஜய் வரும் வழியெங்கும் அவரை ஏராளமான தவெக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது ஒரு இடத்தில் விஜய்யை பார்த்த ஒரு பெண் ஆனந்த கண்ணீரில் அழுத காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதாவது விஜய்யை பார்த்த பெண் அந்த மகிழ்ச்சியை துள்ளிக் குதித்து கொண்டாடினார். தொடர்ந்து அவரின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. அப்போது அவருடன் இருந்த மற்ற இரண்டு பெண்கள் அவரை கட்டியணைத்துக் கொண்டு விஜய்யை பார்த்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
நான் பெண்களின் அண்ணன் என பேசிய விஜய்
நாகை பிரசாரத்தில் பேசிய விஜய், ''என் மீது ஆட்சி அதிகாரம், அடக்குமுறையை கையாளாதீர்கள் சி.எம் சார். நான் தனி ஆள் இல்லை. என் பின்னால் மக்கள் சக்தி உள்ளது. மாபெரும் தமிழ்நாட்டு பெண்கள் சக்தியின் அண்ணன் நான்'' என்று கூறியிருந்தார். விஜய்யின் பேச்சை நிரூபிக்கும்விதமாக தனது சகோதரன் விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் அந்த பெண் ஆனந்த கண்ணீர் சிந்தியதாக தவெகவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர், திமுக விமர்சனம்
அதே வேளையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'ஒரு நடிகரை பார்த்ததற்கு இவ்வளவு சந்தோஷமா? போய் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். தமிழ்நாட்டின் புதிய தலைமுறை சீரழிந்து போகிறது' என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.