
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்துள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் அன்புராஜ் (24). பெயிண்டரான இவர் கடந்த 2023-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிரித்திகா (20) என்ற பட்டதாரி இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. அப்படி இருந்த போதிலும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட பிரச்னையால் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து கடந்த மே மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
பிரித்திகா தனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் அடிக்கடி செல்போனில் பேசியது கணவர் அன்புராஜிக்கு பிடிக்கவில்லை. இதனால் நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரித்திகாவின் தாயார் அவர்களது குடும்ப விஷயத்தில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புராஜ் பிரித்திகா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கீழே தள்ளியுள்ளார்.
பின்னர் வீட்டு சமையலறை இருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரித்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது தந்தை அன்புராஜூக்கு அறிவுரை கூறியதை அடுத்து மனைவி கொலை செய்ததாக கூறி கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரித்திகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து அன்புராஜை கைது செய்தனர்.