யாரு எக்கேடு கெட்டுப் போனாலும் என்ன? திமுகவுக்கு டாஸ்மாக் வருமானம் தான் முக்கியம்! சொல்வது யார் தெரியுமா?

Published : Sep 20, 2025, 04:09 PM ISTUpdated : Sep 20, 2025, 04:10 PM IST
Tasmac revenue

சுருக்கம்

TASMAC Shop: பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், விதிகளை மீறி டாஸ்மாக் மதுக்கடையை திமுக அரசு அமைத்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியது, வெள்ளநீர் வடிகால் பாதையை மறித்தது போன்ற பல விதிமீறல்கள். 

மது வணிகத்தை மட்டும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவார்கள் என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடையை அமைத்து நடத்தி வருகிறது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை அழிக்கும் வகையிலும் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடையை அமைப்பதற்காக செய்யப்பட்டுள்ள விதிமீறல்கள் ஒன்றல்ல... இரண்டல்ல. பழவேற்காடு ஏரியை ஒட்டியப் பகுதி பறவைகள் சரணாலயமாக கடந்த 1980ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள நிலம் முழுவதும் கடற்கரையோர புறம்போக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் யாருக்கும் பட்டா வழங்க முடியாது. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்பட்டு 41 ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடலோர புறப்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை உட்பிரிவு செய்து மகிமை ராஜ் என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பட்டா வழங்கப்பட்ட இடத்தில் தான் கட்டிடம் கட்டப்பட்டு சில வாரங்களுக்கு முன் புதிய மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

மதுக்கடை

விதிமீறல் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. மதுக்கடை அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் வெள்ளநீர் வடிகாலின் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்து மழை பெய்யும் போது வெள்ளநீர் வடிகாலில் தண்ணீர் ஓடாமல் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் மதுக்கடைக்கு குடிகாரர்கள் வசதியாக சென்று வருவதற்காக முதன்மைச் சாலையில் இருந்து மதுக்கடை வரை விதிகளை மீறி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனாலும் மழை நீர் எளிதாக வடியாத சூழல் ஏற்படும்.

புறம்போக்கு நிலமா?

பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் ஆகும். அது தெரிந்தும் இந்தப் பகுதியில் மதுக்கடை நடத்த எவ்வாறு அனுமதி அளித்தீர்கள்? என்று டாஸ்மாக் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘’ புறம்போக்கு நிலமா? என்பது எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகள் இருக்கின்றனவா? என்பது தான் எங்களின் கவலை. அவ்வாறு எந்த சிக்கலும் இல்லாததால் மதுக்கடை அமைக்க அனுமதி அளித்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். திமுக ஆட்சியில் அதிகாரிகளின் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சர்ச்சைக்குரிய மதுக்கடை இதற்கு முன் பழவேற்காடு நகரப் பகுதிக்குள் செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கு குடிகாரர்கள் தொல்லை அதிகரித்ததைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் இந்த இடத்திற்கு மதுக்கடை மாற்றப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் மதுக்கடை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டால் அந்தக் கடையை மூடி முத்திரையிட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக புதிய இடத்தில் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதே பெரும் குற்றமாகும். அதுவும் விதிகளை மீறி மதுக்கடையை கட்டி வாடகைக்கு விட்டிருப்பதை ஏற்க முடியாது.

மது வணிகம் முதன்மை நோக்கம்

பறவைகள் சரணாலயம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை... மழை நீர் வடிவதற்கான கால்வாய் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை... மதுக்கடைகளை அமைப்பது தான் என்று திமுக அரசு செயல்படுவதிலிருந்தே மக்கள் நலனில் அதற்கு அக்கறை இல்லாததை உணர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு மது வணிகத்தை மட்டும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவார்கள். இது உறுதி என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்