இன்னும் இரண்டே நாள் பொறுங்க மக்களே… அப்புறம் வெளுத்து வாங்கும் வட கிழக்கு பருவமழை…

By Selvanayagam PFirst Published Oct 30, 2018, 7:36 PM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெளுத்து வாங்கியது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. இதே போல் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பி வழிந்தது.

இதையடுத்து கடந்த வாரத்துடன் தென் மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் சில நாட்களாக வட கிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கக் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்னு அதிகாலை சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திருவள்ளூர், புழல், செங்குன்றம், ரெட்டேரி,மாதவரம்,சோழவரம், பொன்னேரியில் லேசான மழை பெய்தது .இது வடகிழக்கு பருவமழை தொடங்குவதன் அறிகுறியாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களில்  வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். வங்கக் கடலில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவாதால் கண்டிப்பாக மழை இருக்கும் என்று அவர் கூறினார்.  அதாவது  வங்க கடலில்  நிலவும் வளி மண்டலம் மேலடுக்கு வலுப்பெற்று வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என பாலச்சந்திரன் தெரிவித்தார். . 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்.  சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் கூறினார்

இதனால் மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்த அவர்,  கடலில் காற்று 35 கி.மீ. வேகத்துக்கு மேல் வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்தார்.

click me!