Latest Videos

Bussy Anand Vijay : விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

By Ramya sFirst Published Jul 2, 2024, 12:39 PM IST
Highlights

விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கியது முதலே அவரின் ஒவ்வொரு நகர்வும் உற்று நோக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக விஜய் உள்ள நிலையில், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.

புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அங்குள்ள புஸ்ஸி என்ற சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டதால் இவர்க்கு புஸ்ஸி ஆனந்த் என்ற பெயர் வந்தது. புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான அஷ்ரப்பின் உதவியாளராக இருந்த புஸ்ஸி முதலில் விறகுக்கடை நடந்தி வந்தார். அப்போதிருந்தே அவர் விஜய் ரசிகராக இருந்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட், பைனான்ஸ் ஆகிய துறைகளில் கால்பதித்து தொழிலதிபராக உள்ளார்.

The GOAT Movie : விஜய்யின் கோட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மறைமுகமாக கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

புஸ்ஸி தொகுதியில் இஸ்லாமியர்கள், மீனவர்கள் அதிகம் இருக்கின்றனர். மேலும் அங்கு விஜய்க்கென தனி ரசிக பட்டாளம் உள்ளது. தீவிர விஜய் ரசிகரான இவர் விஜய் ரசிகர்கள் மூலம் அந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். விஜய் பிம்பத்தின் மூலமாகவே அவர் 2006 தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் புதுச்சேரி வரும் போதெல்லாம் அவருடன் பழகும் வாய்ப்பை பெறுகிறார்.

மேலும் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக தான் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்தும் அவரிடம் கூறுகிறார். அதன் பின்னர் தான் புஸ்ஸி ஆனந்தை விஜய்யிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். பின்னர் புஸ்ஸி பகுதி விஜய் ரசிகர் மன்றத்தின் கவுரவ தலைவர் பொறுப்பு அவருக்கு கிடைக்கிறது. பின்னர் புஸ்ஸி தொகுதி எம்.எல்.ஏவானதால் புதுச்சேரி மாநில விஜய் மன்றத்தின் தலைவரானார் புஸ்ஸி ஆனந்த். 

2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். அதன்பின்னரே அவர் விஜய்யுடன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் காவலன் பட பிரச்சனை விஜய்க்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவாளர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று போஸ்டர் அடிக்க தொடங்குகின்றன. அவர்களை எல்லாம் புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி நீக்க சொல்கிறார் விஜய். இது எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. 

அதே நேரம் வார்டு தோறும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்திடம் விஜய் சொல்கிறார். இதையடுத்து கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்களில் வெற்றி பெறுகின்றனர். அதன்பின்னர் புஸ்ஸி ஆனந்த் மீது விஜய்யின் நம்பிக்கை மேலும் வலுவடைகிறது. அப்போது விஜய் மக்கள் இயக்கத்தை தீவிர அரசியல் இயக்கமாக மாற்றும் நடவடிக்கை தொடங்க சொல்லி புஸ்ஸி ஆனந்திடம் விஜய் கூறுகிறார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை புஸ்ஸி ஆனந்த் முன்னெடுக்கிறார்.

திரிஷா, நயன்தாராவை ஓரங்கட்டிவிட்டு... மீண்டும் செல்பி புள்ளயோடு ஜோடி சேரும் விஜய் - தளபதி 69 அப்டேட்

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடங்கப்பட்ட விலையில்லா விருந்தகம், விலையில்லா மருந்தகம், நடிகர் விஜய் பயிலகம் என அனைத்திலும் புஸ்ஸி ஆனந்தின் பங்கு மிக முக்கியமானது. எஸ்.ஏ. சந்திரசேகருடன் முரண்பாடுகள் ஏற்பட்ட போது புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு ஆதரவாகவே இருக்கிறார். 

எளிய அணுகுமுறை, களத்தில் இறங்கி வேலை செய்வது ஆகியவை தான் புஸ்ஸி ஆனந்தின் அடையாளம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறுகின்றனர். விஜய்யின் வார்த்தையை மீறி ஒரு செயலையும் அவர் செய்யாமாட்டார் என்பதாலும், விஜய்யின் மனதில் உள்ளதை புரிந்து செயல்படுவார். இதன் காரணமாகவே தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், முன்னாள் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரின் விமர்சனங்களையும் மீறி விஜய்யை அவரை தனது பக்கத்திலேயே வைத்திருக்கிறாராம். 

click me!