இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக தமிழ்நாட்டின் கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே போர் மூண்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் புகுந்த பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் வைத்துள்ளனர்.
அதேபோல், காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது. போர் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் இந்த போரில், இரு தரப்பிலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது.
இஸ்ரேலின் எல்லைகள் வழியாக ஊடுருவி, கடுமையான தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். மேலும், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தாலும், இந்த முறை கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு, தூதரகம் வாயிலாக மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேல் நாட்டின் இரும்பு குவிமாடம் என்றால் என்ன? இதன் பணி என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய நிறுவனங்கள், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடைக்கானலுக்கும், இஸ்ரேல் - பாலஸ்தீன போருக்கும் என்ன சம்பந்தம் என பலருக்கும் கேள்வி எழலாம். ஆனால், இதற்கு முன்னரும் இஸ்ரேல் யூதர்கள் குறி வைக்கப்பட்ட போது, கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் யூத குடியேற்றங்கள் உள்ளன. வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் முகாமிடுவதும், கூட்டு பிரார்த்தனை நடத்துவதும் வழக்கம். குறிப்பாக, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெருமளவிலான இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தினர் பலரும் கொடைக்கானலில் வந்து ஓய்வெடுத்து செல்வதை நாம் அறிந்திருக்கக் கூடும். எனவே, இதற்கு முன்பு இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனைகளின் போதும், கொடைக்கானல் யூத குடியேற்றங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது, அவர்களது ஹிட் லிஸ்ட்டில் கொடைக்கானல் யூதர்கள், இஸ்ரேலியர்கள் இருந்ததாக வெளியான தகவல் ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்தவகையில், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக தற்போது கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கொடைக்கானலுக்கு வரும் யூதர்கள், இஸ்ரேலியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.