தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அம்மஞ்சல்லி கூட நிதி ஒதுக்கவில்லை என்று கூறினார். அம்மஞ்சல்லி என்றால் என்ன, ஏன் அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று தெரியுமா?
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அப்போது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அம்மஞ்சல்லி கூட நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் புயல், வெள்ளப்பாதிப்புக்கு மத்திய அரசு அம்மஞ்சல்லி கூட தரவில்லை என்றும் பேசினார்.
தமிழ்நாட்டிற்கு மட்டும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும் குஜராத், அசாம், பீகார், மத்திய பிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெள்ளப்பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கிய நிலையில் தமிழகத்திற்கு மட்டுமே ஏன் பாரபட்சம் காட்டுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா தேதி அறிவிப்பு.! எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்
வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நிவாரண நிதியையும் வழங்கவில்லை என்றும் கூறினார். மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கி உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சரி, அம்மஞ்சல்லி என்றால் என்ன, ஏன் அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று தெரியுமா?
பொதுவாக நாம் மற்றவரிடம் பேசும்போது அதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலோ அல்லது அவர் கூறியது நமக்கு பிடிக்காமல் போனாலோ ஒரு பைசாவுக்கு பிரயோஜனமில்லாத விசயம் என்று சொல்வோம்.. அதே போல் வைகைப்புயல் வடிவேலு தனது படங்களில் "அம்மஞ்சல்லிக்கு புரயோஜனம் இல்லை" எனும் வார்த்தையை பயன்படுத்துவதை அடிக்கடி கேட்டிருப்போம். பிரயோஜனம் என்பது எல்லோருக்கும் தெரிந்த வார்த்தை ஆனால் 'அம்மஞ்சல்லி' என்பதற்கு என்ன அர்த்தம் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.
அம்மஞ்சல்லி என்பது எதை குறிக்கிறது? பொதுவாக 'சல்லி' என்பது நாணயம், காசு, எனும் பொருள் தரக்கூடிய ஒன்று. காளைகளின் கொம்பில் சல்லி எனப்படும் நாணயங்களை கட்டிவிட்டு நடத்தப்ட்ட வீர விளையாட்டு சல்லிக்கட்டு, பின்னர் மருவி ஜல்லிக்கட்டு என்று ஆனது.
சரி, அம்மஞ்சல்லி என்றால் என்ன? என்பதற்கு 'அம்மன் சல்லி'. அம்மன் படம் பொறிக்கப்பட்ட காசு என்று அர்த்தம். இந்தியா சுதந்திர காலத்திற்கு நாட்டின் பல பகுதிகளும் பல மாகாணங்களாகவும் தனி நாடாகவும் இருந்தன. அந்த வகையில் சுதந்திரத்திற்கு முன் புதுக்கோட்டையும் அதைச்சுற்றியிருந்த சில பகுதிகளும் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இதை ஆட்சிபுரிந்த அரசர்கள் தொண்டைமான் மன்னர்கள் ஆவர்.
இவர்களின் ஆட்சியில் தனி சமஸ்தானமாய் விளங்கிய புதுக்கோட்டைக்கென தனி நாணயமும் வெளியிடப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. நம் இந்திய நாணயத்தை எப்படி "ரூபாய்" என்று அழைக்கிறோமோ அதுபோல் அந்த நாணயம் "அம்மன் காசு" என்று அழைக்கப்பட்டது.
1738 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட இக்காசுகள் தொடக்கத்தில் உள்ளூர் கைவினைஞர்களால் கையால் வெட்டித் தயாரிக்கப்பட்டு பின்னர் இயந்திரம் கொண்டு தயார் செய்யப்பட்டது. சுமார் 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக் காசுகளின் முக்கிய பக்கத்தில், தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும், அதன் பின்புறம் தெலுங்கு மொழியில் "விஜயா (வெற்றி என்று பொருள்)" என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை அம்மன் காசு என்பதே பேச்சுவழக்கில் "புதுக்கோட்டை அம்மஞ்சல்லி" என்று வார்த்தை தான மருவி, வெறும் அம்மஞ்சல்லி என்று மாறி உள்ளது.