
TTV Dinakaran Support TVK Vijay! தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில் ஆளும் கட்சி, ஆண்ட ஆட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சிக்கு அடுத்து நடிகர் விஜய்யின் தவெக மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் மதுரையில் தவெகவின் பிரம்மாண்ட மாநாடு நடந்து முடிந்துள்ளது.
தவெக மீது எகிறும் எதிர்பார்ப்பு
சுமார் 2 லட்சம் தொண்டர்க்ள் முன்னிலையில் பேசிய தவெக தலைவர் விஜய், மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் நேரடியாக தாக்கினார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவையும் விமர்சித்தார். மேலும் தன்னை தொடர்ந்து விமர்சிக்கும் சீமானுக்கும் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். இந்த மாநாட்டில் தவெக தொண்டர்களை விஜய் பவுன்சர்கள் தள்ளி விட்டது என பல சர்ச்சைகள் எழுந்தாலும், விஜய்க்கு கூடிய கூட்டத்தால் அவர் 2026 தேர்தலில் பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பார் என அரசியல் நிபுணர்கள் பேசத் தொடங்கி விட்டனர்.
விஜய்காந்த் போல் விஜய் வருவாரா?
தேமுதிக கட்சியை ஆரம்பித்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் 2006ம் ஆண்டு இரு பெரும் ஆளுமைகள் ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போதே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதேபோல் விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவர் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், விஜயகாந்த் போன்று விஜய் வருவார் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''2006 தேர்தலில் விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் 2026 தேர்தல் விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன். இது அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தலாம். நான் சொல்வது எதார்த்தம். பல இடங்களில் நட்பு வட்டாரங்கள், கருத்து கணிப்புகள் இதையே சொல்கின்றன. இதை சொல்வதால் நான் அவருடன் கூட்டணிக்கு செல்கிறேன் என்பது அர்த்தமல்ல. மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்பதற்காக எந்தவித நிபந்தனையும் இன்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம். இந்த ஆண்டு இறுதியில் எங்கள் கூட்டணி இறுதி வடிவம் பெறும்'' என்றார்.
தவெக பக்கம் ஒதுங்குகிறாரா டிடிவி?
டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் தான் அமித்ஷா சமீபகாலமாக தமிழகம் வரும்போது டிடிவி தினகரன் சென்று சந்திப்பல்லை. இப்போது அவர் விஜய்க்கு ஆதரவாக பேசியிருப்பது தவெகவுடன் ஐக்கியமாகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.