செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனையில் திடீர் திருப்பம்! ஐகோர்ட் அதிரடி!

Published : Aug 28, 2025, 05:23 PM IST
Senthil Balaji Brother Ashok kumar

சுருக்கம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால், கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான இடங்கள் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அமலாக்கத்துறை அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார் .

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் ஆஜரான அசோக்குமாருக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் அமெரிக்கா செல்ல அனுமதி அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அனுமதி உத்தரவில் உள்ள நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி அசோக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமெரிக்காவுக்கு தன்னுடன், தனது மனைவிக்கு பதிலாக மகள் வரவுள்ளதாகவும், பயண தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதியளிக்க வேண்டுமென அசோக்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா சென்ற உடன் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவிப்பதற்கு பதிலாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு, அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றியமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்