
Chennai Competitive exam scam : மத்திய அரசு சார்பில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. மைக்ரோ சிப் மூலம் காதில் பொருத்தி தேர்வெழுதிய நபர்கள் ஏற்கனவே சிக்கினர். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற போட்டித்தேர்வில் தேர்வர்களுக்கு பதிலாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்வெழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்நோக்கு பணியாளர்களுக்கான 35 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டு,
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று பணி அமர்வு பெற்ற சிலர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரமேஷ் கடந்த ஜூலை மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹரியானாவை சேர்ந்த காஜல், பீகாரை சேர்ந்த சகுன்குமார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த டிங்கு, பிரேம் சிங், அங்கித் குமார் மற்றும் ஜித்து யாதவ் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தக் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்து ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக பீகாரை சேர்ந்த ஜெய்சங்கர் பிரசாத் (34), உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் குமார் வயது 30 மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மேந்திர குமார் (32) ஆகிய மூன்று பேரை உத்திர பிரதேசம் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைதான ஜெய்சங்கர் பிரசாத் வாரணாசி அருகே உள்ள ஜோப்பான் என்ற ரயில் நிலையத்தில் ஜூனியர் இன்ஜினியர் ஆக கடந்த 4 ஆண்டுகள் பணியாற்றி வந்ததும், இவர் தான் சகுன்குமார் என்பவருக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் விசாரணையில் தெரியவந்தது. இதே போல கைதான அரவிந்த்குமார் என்பவர் டெல்லி அருகே உள்ள ரயில் நிலையத்தில் சீப் கமர்ஷியல் டிக்கெட் சூப்பர்வைசராக ஓர் ஆண்டுகள் பணியாற்றி வந்ததும் இவர் டிங்கு என்பவருக்கு ஆள்மாறாட்டம் செய்ததும் தெரியவந்தது.
இதே போல கைதான தர்மேந்திர குமார் பிரோசபாத் மாவட்டத்தில் மதன்புர் கிராமத்தில் உள்ள பள்ளியில் நான்கு வருடங்களாக இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்ததும், இவர் ஜித்து யாதவ் என்பவரிடம் பெருந்தொகையை பெற்றுக்கொண்டு வேறொரு நபரை ஏற்பாடு செய்து கொடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது. லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரக்கூடிய நபர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.