
T.R. Baalu's Angry Reply to Journalist on Annamalai: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'திமுக ஃபைல்ஸ்' என்ற பெயரில் திமுக அரசின் சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் தனக்கு எதிராகப் பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டுள்ளதாகக் கூறி அண்ணாமலை மீது திமுக மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
திமுக மீது அண்ணாமலையின் ஊழல் வழக்கு
உரிய ஆதாரங்கள் இன்றி தனது பெயருக்கு தீங்கிழைக்கும் நோக்கத்தில் அண்ணாமலை அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாக டி.ஆர்.பாலு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அண்ணாமலை கடந்த ஜூலை 17ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், அன்றைய தினம் டி.ஆர். பாலு ஆஜராகததால் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு (அதாவது இன்று) நீதிபதி ஒத்தி வைத்தார்.
நீதிமன்றத்தில் ஆஜரான டி.ஆர்.பாலு
அதன்பேரில் டி.ஆர்.பாலு இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பில் உள்ள ஆதாரங்களை வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, ''21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என அண்ணாமலை சொல்லியிருந்தார். இன்று ஆஜராகி சாட்சியமளித்த போது, 18 நிறிவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தேன். ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
அண்ணாமலை இப்படி கேட்க சொன்னாரா?
அப்போது செய்தியாளர் ஒருவர், ''சார்.. நீங்க 2004ம் ஆண்டு நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. அப்போது போகாத மானமா நான் ஊழல் பட்டியலை வெளியிட்டபோது போய் விட்டது என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே'' என்று கேட்டார். அப்போது டிஆர் பாலு அண்ணாமலை இப்படி உங்களிடம் கேட்க சொன்னாரா? என்றார். அதற்கு செய்தியாளர் 'அண்ணாமலை பேட்டி கொடுத்திருக்கிறார்' என்று கூறியபோது, 'அதற்கு நான் சரியான இடத்தில் பதில் சொல்கிறேன்' என்று டிஆர்பாலு கூறினார்.
டென்ஷன் ஆன டி.ஆர்.பாலு
தொடர்ந்து செய்தியாளரிடம், ''எந்த இடியட் சொன்னதாக இருக்கட்டும். நீங்க இதை கேட்கவில்லையே. அண்ணாமலை சொல்லும்போது நான் அவரிடம் பதில் சொல்கிறேன்'' என்று டி.ஆர்.பாலு சொன்னார். தொடர்ந்து அந்த செய்தியாளர், ''10,000 கோடி உங்களுக்கு வந்து..'' என்று கேள்வியை தொடங்கியபோது டென்ஷன் ஆன டி.ஆர்.பாலு, ''விடுயா.. போயா..'' என்று கூறியபடி பதில் அளிக்காமல் நகர்ந்து சென்றார்.