பாஜக பழிவாங்கும் ஆயுதமா ED, CBI இருக்கு! இதுல இது வேறயா! அலறும் திமுக கூட்டணி கட்சி!

Published : Aug 21, 2025, 02:21 PM IST
Modi with Amit Shah

சுருக்கம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை குறிவைத்து, அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு புதிய மசோதாக்களை கொண்டுவந்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நவீன பாசிச போக்குகளைக் கருத்தில் கொண்டால், இந்த சட்டமுன்வடிவுகள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை குறிவைப்பதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்கும் வகையிலும், எதிர்க் கட்சிகளை முடக்கும் வகையிலும், அரசியலமைப்பு (130-வது திருத்தம்) மசோதா, யூனியன் பிரதேசங்கள் (திருத்தம்) மசோதா 2025, மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகிய மூன்று மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா 20.8.2025 அன்று தாக்கல் செய்ய செய்தார்.

பதவியிலிருந்து நீக்கப்படுவார்

உள்நோக்கம் கொண்ட 130வது திருத்த மசோதா இதில், அரசியலமைப்பு (130-வது திருத்தம்) மசோதாவானது, “பதவியில் இருக்கும்போது தொடர்ச்சியாக முப்பது நாட்களுக்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை பெரும் வகையிலான குற்றத்தை புரிந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதி நிதி அவ்வாறு காவலில் வைக்கப்பட்ட முப்பத்து ஒன்றாவது நாளுக்குள் பிரதமரால் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் ஆலோசனையின் பேரில், பதவியிலிருந்து நீக்கப்படுவார்” என்று கூறுகிறது.

அரசியல் பழிவாங்கும் உள் நோக்கம்

முப்பத்து ஒன்றாவது நாளுக்குள் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கவில்லை என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாகவே பதவியை இழப்பார் எனவும் அப்பிரிவுகள் தெரிவிக்கின்றன. இது அரசியல் பழிவாங்கும் உள் நோக்கத்துடனும், இயற்கை நீதிக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி, அம்மசோதா நகல்களை எதிர்க்கட்சிகள் மக்களவையில் கிழித்து வீசியுள்ளனர். இதையடுத்து, அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா உட்பட 3 மசோதாக்களையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்விற்கு அனுப்புவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம்

இயற்கைக்கு மாறான பாசிச போக்குடன் தாக்கல் செய்ய முயன்ற, அம்மசோதா மூலம் பிரதமரும் பதவி இழப்பார் என்று கூறப்பட்டிருந்தாலும், அது நாட்டு மக்களை, எதிர்க்கட்சிகளை ஏமாற்றுத் தந்திரமே ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாக வேண்டும் என்பது அவசியம் இல்லை; குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யலாம்” என்பதாகும். மேலும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரங்களையும் வழங்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

பாஜக அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கு

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆயுதம் ஒன்றிய பாஜக அரசானது, ஏற்கெனவே பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில், அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட முகமைகளை ஏவிவிட்டு, எதிர்க் கட்சிகளையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களையும் முடக்கிக் கொண்டிருக்கிறது. இது, ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்கான பாஜக அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகளையே காட்டுகிறது. கடந்த காலங்களிலும், பல சமயங்களில் நீதித்துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற சட்டமுன்வடிவுகளைக் கொண்டுவர பாஜக முயற்சிகளை செய்துள்ளது.

ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கு

தற்போதைய அரசாங்கத்தின் நவீன பாசிச போக்குகளைக் கருத்தில் கொண்டால், இந்த சட்டமுன்வடிவுகள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை குறிவைப்பதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகும். எனவே, ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை, அவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், குற்றச்சாட்டுகளின் கீழ் 30 நாள் சிறையில் இருந்தாலே பதவி பறிபோகும் என்பது ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உண்மையான நோக்கங்களை மறைப்பதற்காகவே இந்த சட்டமுன்வடிவுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. எனவே, நாட்டு மக்களுக்கு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அம்மசோதவை, ஜனநாயகத்தில் பேராபத்தை ஏற்படுத்தும். ஆக, ஒன்றிய அரசின் இந்த மசோதாவை திரும்ப பெற, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு