
TVK MADURAI MANADU TASMAC SALE : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறவுள்ளது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். நேற்று இரவில் இருந்து மாநாட்டு மேடைக்கு முன்பாக இடம் பிடிக்கும் வகையில் முன்கூட்டியே வந்து அங்கேயே தங்கியுள்ளனர். மேலும் விஜய் தொண்டர்களை சந்திப்பதற்காக சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ராம்ப் வால்க் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைக்கு அருகில் நாற்காலிகளை கொண்டு சென்றும் தொண்டர்கள் இடம்பிடித்து வருகிறார்கள்.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்காக தண்ணீர் , கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி போதுமானதாக இல்லாத நிலை நீடித்து வருகிறது. மாநாட்டு பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளது. இதனால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் நடந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியில் 100 டிகிரியை வெயில் தாண்டியுள்ளது. இந்த நிலையில் தவெக மாநாட்டையொட்டி அந்த பகுதியை சுற்றியிருந்த 14 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை மாநாடு நடைபெறும் நாளில் மூட மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து, ஆகஸ்ட் 21 அன்று பாரபத்தி பகுதிகளிலும் மதுரையின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால் குஷியான தவெக தொண்டர்கள் அருகில் உள்ள மதுபான கடைகளில் குவிந்து வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக தவெக கொடியோடு தொண்டர்கள் அங்கே மதுபானம் வாங்கி வருகிறார்கள். அருகில் கிடைக்கும் இடங்களில் அமர்ந்து மதுபானத்தை அருந்தி வருகிறார்கள். ஒரு சில டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்கள் முழுவதுமாக காலியாகியுள்ளது. இதனால் கூடுதல் சரக்குகளை அனுப்பு மாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.