கஜா புயல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை கபளீகரம் செய்துவிட்டு சென்றுள்ளது. கஜா புயல் கரையை நெருங்கும் போது வலு குறையும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
கஜா புயல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை கபளீகரம் செய்துவிட்டு சென்றுள்ளது. கஜா புயல் கரையை நெருங்கும் போது வலு குறையும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. இதனை உறுதிப்படுத்துவது போல் கஜா புயல் நெருங்கி வந்த நிலையிலும் நாகை, கடலூர், புதுச்சேரி, ராமநாதபுரத்தில் எவ்வித வானிலை மாற்றமும் நிகழவில்லை. இதனால் கஜா புயலை பொதுமக்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் புயல் கரையை கடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக தான் வானிலை மையம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.
undefined
அதாவது கஜா புயல் தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. நாகை – வேதாரண்யம் இடையே புயல் கரையை கடக்கும என்று தெரிவிக்கப்பட்டதால் அந்த பகுதிகளில் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் தனது கோர தாண்டவத்தை தொடங்கியது. 12.30 மணிக்கு பிறகு வேதாரண்யத்துடனான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
வேதாரண்யத்தில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சரி, புயல் தீவிரமாக இருப்பதால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் தான் புயல் கரையை கடந்து புதுக்கோட்டை வழியாக திண்டுக்கல்லுக்கு சென்றது. அதே நேரத்தில் வேதாரண்யத்திலும் விடிந்தது. ஆனால் விடிந்த பிறகு வீடுகளை விட்டு மக்கள் வெளியே வரவில்லை. காரணம் புயல் கரையை கடந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம் அகலவில்லை.
நள்ளிரவில் புயல் கரையை கடந்த போது எழுந்த ஊழிக் காற்று மற்றும் பேர் இரைச்சல் அங்குள்ளவல்கள் இதுவரை கேட்காத ஒன்று. சுமார் எட்டு மணி அளவில் வேதாரண்யத்தில் மக்கள் மெல்ல மெல்ல வெளியே வரஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் அனைவர் முகத்திலும் மரண பீதி இருந்தது. திரும்பிய திசை எல்லாம் மரங்கள் முறிந்துகிடந்தன. மின்கம்பங்கள் சாய்ந்திருந்தன. குடிசை வீடுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தன.
செல்போன் கோபுரங்கள் சாய்ந்ததால் வெளி உலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. வேதாரண்யத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் பலத்த சேதம் அடைந்தன. இதனால் உதவிக்கு கூட யாரையும் அழைக்க முடியவில்லை. இதே நேரத்தில் வேதாரண்யம் – நாகை சாலையில் அடிக்கு ஒரு மரம் முறிந்து விழுந்திருந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் கூட வேதாரண்யத்தில் இருந்து வெளியேற முடியாத நிலை.
வேதாரண்யம் முற்றிலும் வெளி உலக தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் ஒரு குழு சாலையில் இருந்த மரங்களை வெட்டி அகற்றிக் கொண்டே அங்கு சென்று சேர்ந்தனர். இதற்கு சுமார் 10 மணி நேரம் தேவைப்பட்டது. அதன் பிறகே வேதாரண்யம் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. ஒட்டு மொத்தமாக புயலால் வேதாரண்யம் பேரழிவை சந்தித்துள்ளது. வேதாரண்யம் நகர் மீண்டு வருவதற்கு அனைத்து தரப்பினரும் உதவிகளை வாரிக் கொடுக்க வேண்டும்.