நாகை 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் 9ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன் துறைமுகத்தில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை...
கஜா புயலைத் தொடர்ந்து கடலூர், நாகை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 செ.மீ. க்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ளவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் காவல் துறையினர். சென்னை மெரினா கடற்கரையின் இணைப்புச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நாகையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல், இன்னும் சில மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புயல் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு. புயல் கரையைக் கடக்கும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் வழியாகச் செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
undefined
நாகை துறைமுகத்தில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 9ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன் துறைமுகத்தில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடலூர், நாகை மற்றும் காரைக்கால், புதுச்சேரி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருத்துவ உதவி சேவை 104, கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள், 936 அவசர கால ஊர்திகள், 41 இருசக்கர வாகன ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் கரைக்குச் செல்ல வேண்டாம் என்றும், மரங்களுக்குக் கீழே ஒதுங்க வேண்டாம் என்றும், தமிழக அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அவசர உதவி அழைப்புகளைக் கையாள்வதற்குக் கூடுதலாக 200 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கஜா புயல் 17 கி.மீ. - 20 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி வருகிறது என்றும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் பெருமழை பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளளார். சென்னையில் நேரடியாகப் புயல் பாதிப்பு இருக்காது எனவும், ஓரிரு இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு சுமார் 4 மணி நேரம் நடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார். “புயல் கரையைக் கடந்த பின்னர் தமிழகத்தில் உள்மாவட்டங்களிலும், கேரளாவிலும் மழை பெய்யும்; புயல் கரையைக் கடக்கும்போது 20.செ.மீ.க்கு மேலாக மழை பெய்யும். புயல் கடக்கும் நேரத்தில் கடல் அலைகள் உயரும் என்பதால், கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயமும் உள்ளது. எனவே தாழ்வான இடங்களில் இருப்போர் மேடான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். நாளை பிற்பகல் முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும். நாளை இரவு அரபிக்கடலை நோக்கி கஜா புயல் நகரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.