பள்ளிக்கல்வித் துறையில் இருந்து உதய சந்திரன் மாற்றம்… ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிர்ச்சி ….

By Selvanayagam PFirst Published Aug 25, 2018, 8:55 AM IST
Highlights

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்ட செயலாளராக இருந்த உதயசந்திரன் திடீரென தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கொட்டையன் பொறுப்பேற்றபோது பாடத்திட்ட செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாத பாடத் திட்டங்களை மாற்ற முயற்சி எடுத்து 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.


பாடத்திட்டம் உருவாக்க அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்களை தேடிப் பிடித்து புதிய பாடத்திட்டங்களை உருவாக்கினார். உதய சந்திரனின் செயல்பாடுகளை பார்த்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.

மேலும்  பிற மாநிலங்களில் பள்ளிக் கல்வித்துறையின்  செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கல்வித்துறை இணை இயக்குனர்களை அனுப்பினார். அவர்களின் பரிந்துரைகளை புதிய பாடத்திட்டங்களில் புகுத்தினார்.

தமிழக மாணவர்களுக்கு பெரும் பிரச்சனையாக  உள்ள 'நீட்' தேர்வில் கேட்கப்படும் 99 சதவீதம் வினாக்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் பதில் உள்ளதாக வெளிப்படையாகவே உதயசந்திரன் கூறி வந்தார். கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் புதியபாடத் திட்டங்களில் 'கியூ.ஆர். கோடு' உட்பட பல அம்சங்கள் புகுத்தப்பட்டதற்கும் உதயசந்திரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


இதற்கிடையே இரண்டாம் கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட பிற வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெறு வருகின்றன. தற்போது அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அந்தப் பணிகள் மப்படியே தடைப்பட்டு போகும் என கல்வியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

உதய சந்திரனுக்கு ஆதரவாக ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் 'வாட்ஸ் ஆப்' முகப்பில் அவரது படத்தை வைத்துள்ளது தற்போது கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதிய பாடத்திட்டங்களில் என்ன பகுதிகள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய பாடவாரியாக நிபுணர்கள், பேராசிரியர்கள், இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டன. 

1, 6, 9, பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில்  உதயசந்திரன் மாற்றப்பட்டதால் அந்தப் பணிகளும் முடங்கிவிடுமோ எனற் அச்சம் எழுந்துள்ளது. உதய சந்திரனை மீண்டும் பள்ளிக் கல்வித்துறைக்கே மாற்ற வேண்டும் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் போராடத் தயாராகி வருவதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!