சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மக்களவைத் தொகுதியில், சேலம் தொகுதியில் திமுக சார்பில் மலையரசன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் சென்றார். சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரசாரத்தின் போது பெண்களை இழிவாக பேசிய அதிமுக எம்எல்ஏ; ஆத்திரத்தில் பிரசார வாகனத்தை உடைத்த மக்கள்
இந்நிலையில், அமைச்சர் உதயநிதியின் பரப்புரை என்பதால் அதிப்படியான கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக நிர்வாகிகள் பலரும் தங்கள் பகுதிகளில் இருந்து பலரையும், சரக்கு வாகனம், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சாரை சாரையாக அழைத்து வந்தனர்.
அந்த வகையில், தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையத்தில் இருந்து மினி ஆட்டோவில் 20 பேர் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். வாகனம் கெங்கவல்லி அருகே உள்ள நாவலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காமக்காபாளையத்தைச் சேர்ந்த தயாநிதி (வயது 30), செல்லதுரை (50) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.