மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை தொடர்பான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதன் உரிமைத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் கைப்பற்றி இருந்தது. இதற்கு அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதாவது அரிட்டாபட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள், கிராம மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரமடைந்து வந்தது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை எப்போது முடிகிறது? மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?
இதற்கிடையில், மேலூர் பகுதியிலுள்ள முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், மேலூர் தொகுதி அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் கோவில் பகுதியில் இருந்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள மத்திய தபால் நிலையத்தை நோக்கி ஜனவரி 7-ம் தேதி பேரணியாக சென்றனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடைபயணம் நடத்தியதாக சுமார் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 11,608 பொதுமக்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் நடத்திய மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதி அளித்து, இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார்.
இதையும் படிங்க: அரசியல் செய்ய ஆசை இருந்தால் பதவியிலிருந்து விலகி நேருக்கு நேர் வாங்க! களத்தில் பார்த்துக்களாம்! மதிவேந்தன்!
மேலும் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள். இதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன.