அரசியல் செய்ய ஆசை இருந்தால் பதவியிலிருந்து விலகி நேருக்கு நேர் வாங்க! களத்தில் பார்த்துக்களாம்! மதிவேந்தன்!

By vinoth kumar  |  First Published Jan 26, 2025, 1:43 PM IST

ஆளுநர் ரவி குடியரசு தின உரையில் அரசியல் பேசியதாக அமைச்சர் மதிவேந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி, சட்டமன்ற நடைமுறைகள், மற்றும் பல்கலைக்கழக விவகாரங்கள் குறித்த ஆளுநரின் செயல்பாடுகளை அவர் விமர்சித்துள்ளார். 


ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். அது தமிழ்நாடு அரசுக்கும், திமுகவுக்கும் சாதகமானதாகவே அமையும் என அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நம் ‘குடியரசுவின் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் மங்கலமான தருணத்தில்’ எனச் சொல்லி அமங்கலத்தை தனது குடியரசு தின உரையாக வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் ரவி அவர்கள். குடியரசு தின வாழ்த்து என்ற பெயரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை வசைமாரி பொழிவதற்கு குடியரசு தினத்தை அரசியல் சட்டப் பதவியில் வகிக்கும் ஆளுநர் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனையானது. ஆளுநருக்கு அரசியல் சட்டத்திலும் நம்பிக்கை இல்லை. நம் நாட்டின் குடியரசு தினத்தன்று கூட நாலு நல்ல வார்த்தை சொல்ல மனம் இல்லை என்பதை இது காட்டுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது.
 
சட்டமன்றத்தில் ஆளுநரின் செயல்பாடு, ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து கொண்டிருப்பதை பார்த்து ஆளுநர் ரவி தனது தூக்கத்தை தொலைத்திருக்கிறார். அதனை போக்க திமுக அரசு மீது அவதூறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நிதி ஆயோக் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 17 இலக்குகளில் தமிழ்நாடு பெரும்பாலானவற்றில் முன்னிலை பெற்றிருக்கிறது. ஒட்டு மொத்த மாநிலங்களை பொறுத்த வரை தேசிய அளவில் மூன்றாம் இடத்தை தமிழ்நாடு பிடித்தது. வறுமை ஒழிப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றது. இப்படி நிதி ஆயோக்கின் அறிக்கையில் சொல்லப்பட்டது எல்லாம் ஆளுநருக்கு தெரியாதா? இல்லை பிரதமர் மோடி ஆட்சியால் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் மீதே ஆளுநருக்கு நம்பிக்கை இல்லையா? இதெல்லாம் தெரியாமல் இருப்பது ராஜ்பவனின் பார்வைக் கோளாறா?

இதையும் படிங்க: கைவிட்ட உயர்நீதிமன்றம்! வேறு வழியில்லாமல் உச்சநீதிமன்றம் படியேறிய எடப்பாடி பழனிசாமி!

Latest Videos

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” என மூன்று நாட்களுக்கு முன்பு சொன்ன ஆளுநர், இப்போது அப்படியே மாற்றி பேசுவதற்கு இரட்டை நாக்குதான் வேண்டும். ‘’வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக  உணர்கின்றனர்’’ என பேசிய உதடுகள்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் , தீவிரவாத அச்சுறுத்தல் என்றெல்லாம் புரண்டு பேசுகின்றன. இப்படியெல்லாம் சொல்வதற்கு ’மேதகு’ என்ற பெருமை வாய்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆளுநர் அமர்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. பிளவு வாதப் பேச்சை பேசுவதற்கும், மாநில அரசோடு மல்யுத்தம் நடத்துவதற்கும் ராஜ்பவன் ஒன்றும் அரசியல் குஸ்தி களமல்ல. 

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க விடாமல் முட்டுக்கட்டைப் போட்டு பல்கலைக்கழகங்கள் நிர்வாகத்தை முடக்கி வைத்திருப்பது ஆளுநர். பல்கலைக்கழகங்களை அரசியல் களமாக மாற்ற செயல்படுவதும் ஆளுநர்தான். ஆனால் ஏதோ பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் பற்றி ஏன் அக்கறை நாடகம்? ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள் மக்களிடையே கொதிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், யாருடைய அரசியல் சதிக்கு ஆளுநர் துணை
போகிறார்?

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் படித்து முன்னேறி நல்ல நிலமைக்கு வந்துவிடக் கூடாது என்ற சனாதன வர்ணாசிரம கோட்பாட்டை தூக்கி பிடித்து, குலக்கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ரப்பர் ஸ்டாம்பாக ஆளுநர் ரவி திகழ்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீரழிக்க நினைக்கும் வஞ்சகர்களுக்கு துணை போகும் வேலையை ஒரு மாநிலத்தின் ஆளுநரே செய்ய துணிந்திருக்கிறார். பெரும்பாலானா மக்களின் வாக்குகள் மூலம் அமைந்த மக்கள் மன்றமான சட்டமன்றத்தை துளியும் மதிக்காதவர் ஆளுநர். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு அரசை முடக்க நினைக்கிறார். தமிழர் அடையாளங்களையும்  தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்து உணர்வுரீதியாக தமிழர்களை காயப்படுத்துகிறார். தொடர்ந்து தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரித்து தமிழர்களை தேச விரோதிகள் போல் பேசிவருவது ஆளுநருக்கு அழகல்ல. 

இதையும் படிங்க:  சமூக நீதிக்கு சொந்தக்காரன் வாய் கிழிய பேசுனா மட்டும் போதுமா? திமுக அரசு செய்வதை நாடே பார்க்கிறது! எல்.முருகன்!
 
ஆளுநரை மாற்றிவிடாதீர்கள். அவர்தான் திமுகவுக்கான பிரச்சார பீரங்கி என எங்கள் தளபதி முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார். அந்த ஆத்திரம்தான் ஆளுநர் அறிக்கையில் நிரம்பி வழிகிறது. தமிழ்நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என அரசியல் பேசிக் கொண்டிருக்கும் ஆளுநருக்கு எங்கள் தமிழ் மக்களின் அரசியல் புரிதல் பற்றிய தெளிவில்லை என்று அவரது பேச்சிலேயே புலனாகிறது. வாட்ஸப் பார்வேர்டுகளை வைத்து ஒரு உரையைத் தயாரித்து அதைப் பேசிவிட்டு போனால் மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சிலர் கைதட்டலாம். ஆனால் தமிழ் மக்கள் தெளிவானவர்கள். அரசியல் உரையிலும் எழுத்திலும் ஒவ்வொரு வரிக்கும் என்ன உள்நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளும் விவரமானவர்கள். ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசட்டும்.
அது தமிழ்நாடு அரசுக்கும், திமுகவுக்கும் சாதகமானதாகவே அமையும்.

போதைப் பொருள் தடுப்பை மேற்கொள்ள எங்களது முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 2022-ஆம் ஆண்டில் மாநில அளவிலான மாநாடு நடத்தப்பட்டு 2023-ல் மட்டும் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14,770 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய செய்திகள் ஆளுநருக்குத் தெரியுமா? குஜராத்திலும்- வட மாநிலங்களிலும் டன் கணக்கில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவது எல்லாம் ஆளுநர் கண்ணுக்குத் தெரியவில்லையா?

பாகுபாடான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறைகள், பல்வேறு முட்டுக்கட்டைகள் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்படுவது வெளிப்படையாகத் தெரிகின்றது. அதற்கு ஆளுநரும் ஒரு கருவி! ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது அதில் பல்வேறு வெற்றிகளையும் ஈட்டி வருகிறது. இருந்தபோதும் மாநில அரசுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் தமிழ்நாடு அரசை வஞ்சித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க முயற்சித்து வருகிறது. இதையெல்லாம் தாண்டி தமிழ்நாடு அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது. வடக்கு எத்தனை சதிகளைச் செய்தாலும் அதை முறியடிக்கும் கலையை பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.  தமிழ்நாடு அரசு மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றிருக்கிறது.

அரசை எதிர்த்துப் பேச எந்தவொரு விவகாரமும் இல்லை. 2026 தேர்தலிலும் திமுகவே 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் கேட்டு ஆளுநர் ரவி அவர்கள் விக்கித்துப் போயிருப்பார். அரசியல் செய்ய ஆசை இருந்தால் அப்பதவியிலிருந்து விலகி- எங்களோடு நேருக்கு நேர் அரசியல் களத்திற்கு வரட்டும். திராவிட மாடல் அரசின்சாதனைகளை நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டின் பெருமைகளை நாங்கள் பேசுகிறோம். ஆளுநர் ரவி அரசியல்வாதி ரவியாக எங்களுக்கு பதில் சொல்லட்டும். அதை விடுத்து குடியரசு தினம், சட்டமன்றம் என எதை எடுத்தாலும் அரசியல் செய்து- நம் நாட்டின் குடியரசுத் தினப் பெருமைகளையும், தமிழ்நாட்டின் அருமைகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என மதிவேந்தன் தெரிவித்துள்ளார். 

click me!