மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் அப்பகுதிக்கு இன்று செல்கிறார். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை தொடர்பான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நடவடிக்கையும் தொடங்கியது. இதற்கு அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானமும் இயற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நான் ஆட்சியில் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன். அப்படி டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
சுரங்கம் - மத்திர அரசு அதிரடி அறிவிப்பு
இதே போல பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது என தெரிவித்தார். இந்த நிலையில் ‘டங்ஸ்டன்’ சுரங்கம் ஏலதத்தை மத்திய சுரங்கத்துறை ரத்து செய்தது. இதனால் அரிட்டாபட்டி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அரிட்டாப்பட்டிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை செல்லவுள்ளார். மாலை 4 மணி அளவில் அரிட்டாப்பட்டி, வல்லாளபட்டி கிராமங்களுக்கு செல்கிறார். அங்கு கிராம மக்களால் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாப்பட்டி செல்வதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.
ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு
தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, பாரதப் பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.