PM Modi in Tamil Nadu : இன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது.
இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் முதல் முறையாக தமிழகத்தில் இவ்வாண்டு நடத்தப்பட உள்ளது. அதற்கான துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்று இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார்.
இன்று ஜனவரி 19ம் தேதி துவங்கும் இந்த போட்டிகள், வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இன்று மாலை பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி அவர்கள், மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன் பிறகு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.
இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சிக்குச் செல்கிறார். அங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.
பின் அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்குச் சென்று, நாளை இரவு அங்கு தங்குகிறார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
அதன் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்குச் செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து அயோத்தி புறப்பட்டுச் செல்கிறார்.