
துபாய் தனது இரண்டாவது வீடு என்று இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வெளியே துபாயே தனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்ற அவர், துபாயில் இந்திய ரசிகர்களிடமிருந்து அணிக்கு பெரும் ஆதரவு கிடைத்ததாகவும், சாம்பியன்ஸ் டிராபி சிறப்பாக நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்சில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற கே.எல்.ராகுல், "துபாயை மூன்று மணி நேரத்தில் அடைந்துவிடலாம். நான் திரும்பி இங்கே வந்து விளையாட விரும்புகிறேன். ரசிகர்களின் ஆதரவும் மிகப்பெரியது" என்றார்.
ராகுல் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்த ராகுல், 5 போட்டிகளில் 140 ரன்கள் எடுத்தார். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார்.
ஐசிசியின் சிறந்த அணியில் ராகுல்:
ஐ.சி.சி. அறிவித்துள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியிலும் ராகுல் உள்பட 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த அணிக்கு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலைமை தாங்குகிறார். இந்த அணியில் நான்கு நியூசிலாந்து வீரர்களும் இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த எந்த வீரரும் ஐ.சி.சி அணியில் இடம் பெறவில்லை. ராகுலைத் தவிர, இந்திய வீரர்கள் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடும் லெவனில் உள்ளனர். ஐ.சி.சி அணியில் 12வது வீரராக அக்சர் படேலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் இருந்து ரச்சின் ரவீந்திர, க்ளென் பிலிப்ஸ், சாண்ட்னர் மற்றும் மாட் ஹென்றி ஆகியோரும் அணியில் உள்ளனர். முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோரும் அணியில் இருக்கிறார்கள்.
ஐ.சி.சி. அறிவித்த ஆண்டின் சிறந்த அணி:
ரச்சின் ரவீந்திர, இப்ராஹிம் ஜத்ரான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், அஸ்மதுல்லா உமர்சாய், மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் (12வது வீரர்).