
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாகவே ஒரு கிலோ தக்காளி ரூ.120 - 180 வரை விற்பனையானது. வேறு சில மாநிலங்களில் ரூ.200 வரை கூட தக்காளி விற்பனையானது. பருவமழை பொய்த்ததால் உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே தக்காளி விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரம் தக்காளி திருட்டு, தக்காளி விவசாயி கொலை, தக்காளியை பயன்படுத்தியதால் கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற மனைவி, தக்காளிக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு என பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இப்படி ஏதாவது ஒரு வகையில் தக்காளி தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வந்தது.
இதனிடையே தமிழகத்தை பொறுத்த வரை பண்ணை பசுமைக்கடைகள், ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது. அதாவது 100 ரூபாய்க்கு மேல் விற்பனையான தக்காளி படிப்படியாக குறைந்து நேற்று 70 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் சென்னைக்கு வரும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தக்காளி விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ரூ.50-க்கு தக்காளி விற்கப்படுகிறது. 750 டன் கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனையில் ரூ.70 வரை தக்காளி விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் குறையவே வாய்ப்புள்ளதாக வியாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..