தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் மழை !! திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை….

By Selvanayagam PFirst Published Oct 4, 2018, 8:51 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், நாகை,  மாவட்டங்களுக்கும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மழைக்குத் தகுந்தவாறு அந்தந்த பள்ளி தலைமையாசியர்கள் விடுமுறை அளிக்க மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

5 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும், சில இடங்களில் மிக கன மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துள்ளது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.  மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல்,  புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய  மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. 

சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. தேனி: மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது 

கனமழை காரணமாக திருவாரூர் , புதுக்கோட்டை, சேலம், நாகை,கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!