Thol Thirumavalavan : சேலத்தை அடுத்த தீவட்டிபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் "சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிபட்டியலில் இருந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சமூக விரோதிகள் ஆதிதிராவிட மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
காவல்துறையினரும் வழக்கம் போல பாதிக்கப்பட்ட ஏழை எளிய ஆதிதிராவிட மக்கள் மீது தாக்குதல் நடத்தி, தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர். சாதி வெறியர்களின் கல்வீச்சிலும், காவல்துறையினரின் தடியடி தாக்குதலிலும் படுகாயம் அடைந்த ஆதிதிராவிடர்கள் பலரை பொய் வழக்கில் கைது செய்து சிறை படுத்தியுள்ளனர்.
undefined
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழாவில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு திருவிழாவில் ஆதிதிராவிடர்கள் பங்கேற்க கூடாது என பாமக தரப்பை சார்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கடந்த மே மாதம் 2ம் தேதி இரு தரப்பினரை அழைத்து அமைதிக்கான பேச்சு வார்த்தையை நடத்தினர்.
இதில் சுமூகமாக தீர்வு எட்டவில்லை, எனவே தேரோட்ட திருவிழா நடத்தக்கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த இளைஞன் ஒருவனை சாதி வெறியர்கள் தாக்கியுள்ளனர். மண்டையில் பலத்த காயங்களுடன் அவன் தப்பியுள்ளான். அவனுடன் இருந்த பிற இளைஞர்கள் மீது சரளைகற்களை வீசி தாக்கியுள்ளனர்.
அத்துடன் அப்பகுதியில் உள்ள கடைகளில் தீ வைத்துள்ளனர், இந்த வன்முறை வெறியாட்டம் காவல்துறை முன்னிலையில் நடந்துள்ளது. வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதிவெறி கும்பலை கட்டுப்படுத்தாத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகுள்ளேயே புகுந்து, அப்பாவி மக்களை இழிவாக ஏசியும் பேசியும் 14 பேரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
ஆகவே பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மே 5ம் தேதி புதன்கிழமை அன்று சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அவர் கூறியிருக்கிறார்.