தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு: முழு பட்டியல்!

By Manikanda Prabu  |  First Published Jan 12, 2024, 6:09 PM IST

தமிழுக்கும், தமிழ்மொழிக்கும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களுக்குமான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன


தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு 1983ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்துக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

தேசியத் தமிழ்க் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோரை கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உ. பலராமனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று கலைஞர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவரும், தமது 92ஆவது வயதிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? முழு பட்ஜெட்டில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதும், தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா. கருணாநிதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்  விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும்.

அதேபோல், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருதினை’’ வழங்கி கௌரவித்து வருகிறது.  அந்தவகையில், 2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபண்டியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும்.

click me!