பிரபல எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் இன்று தனது 65 வயதில் காலமானார்.
பிரபல எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் இன்று தனது 65 வயதில் காலமானார். அவர் தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து காயம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.
மதுரையில் டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இந்திரா சௌந்தர்ராஜனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
undefined
இந்திரா சௌந்தர்ராஜனின் இயற்பெயர் சௌந்தர்ராஜன். 1958ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சேலத்தில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற இந்திரா சௌந்தர்ராஜன் பிரபல வார, மாத இதழ்களிலும் பாக்கெட் நாவல்களிலும் கதைகள் எழுதி தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார்.
நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், மறுபிறப்பு, பேய்கள், கடவுள்கள் போன்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தனது படைப்புகளை உருவாக்கினார். அவை பெரும்பாலும் தமிழ்நாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்த உண்மைச்சம்பவங்கள் அடிப்படையில் அமைந்தவை.
தொலைகாட்சித் தொடர்கள் கதை, வசனம் எழுதியிருக்கிறார். சிவமயம், ருத்ர வீணை, விடாது கருப்பு, மர்ம தேசம் ஆகிய தொடர்கள் புகழ்பெற்றவை. கிருஷ்ண தாசி , கால பைரவ ரகசியம் ஆகியவை இந்தியிலும் தொடராக வெளியாகி வரவேற்பபு பெற்றவை.
திரைத்துறையில், சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களுக்கும் பங்களித்திருக்கிறார். ஆன்மிக சொற்பொழிகளுக்காகவும் புகழ்பெற்று விளங்கியவர் இந்திரா சவுந்தர்ராஜன். டிவி சேனல்களிலும் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் ஆன்மிக உரைகளை நிகழ்த்தி வந்தார்.
என் பெயர் ரெங்கநாயகி நாவலுக்காக 1999ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித்துறையின் மூன்றாம் பரிசைப் பெற்றார். 2007ஆம் ஆண்டு சிருங்காரம் படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
இந்தியா சௌந்தரராஜன் நீண்ட காலமாக மதுரையில் வசித்து வந்தார். மனைவி பெயர் ராதா. மகள்கள் ஐஸ்வர்யா, ஸ்ரீநிதி.