தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை அமைப்பதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், சதித்திட்டம் தீட்டியதாக அவ்வப்போது பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு காரில் இருந்த சிலிண்டா் வெடித்த சம்பவத்தில், ஜமேஷா முபீன் என்பவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த தமிழக காவல்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான பணிகளை உள்துறை மேற்கொண்டு வந்தது. ஏற்கனவே, கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்கனவே தீவிரவாத தடுப்புப் பிரிவு உள்ள நிலையில், காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்று அப்பிரிவு செயல்படும் விதம், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும், பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உளவுத்துறை ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கு டிஐஜி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி தலைமை வகிப்பார். இந்த பிரிவில் 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இப்பிரிவில் பணியாற்றவுள்ளனர்.
AMMK Vs AIADMK : அமமுகவின் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!
காவல் துறையில் இருந்து 190 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக தேர்வு செய்ய உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் முதல் கட்டமாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தன்னிச்சையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் இந்த பிரிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக 60.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.