
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் நேற்று இரவு துவங்கி, விடிய விடிய நல்ல மழை பல இடங்களில் கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் பகுதி, சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், மந்தைவெளி மற்றும் சாந்தோம் உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடர்ச்சியாக இரவு முதல் காலை வரை பெய்து வந்தது.
இதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை வர பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆகவே இந்த மூன்று நாட்கள் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலட் விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.