பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தமா.? ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Nov 21, 2023, 7:51 AM IST

ஆவினில் பச்சை நிற பாக்கெட் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலை ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது. மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. 


ஆவின் பால் தங்குதடையின்றி விற்பனை

ஆவினில் பச்சை நிற பால்பாக்கெட் விற்பனை நிறுத்தப்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியது. மேலும் பச்சை நிற பால்பாக்கெட்டை நிறுத்திவிட்டு புதிய பாலை அறிமுகம் செய்து மறைமுகமாக விலை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

Tap to resize

Latest Videos

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 14.50 இலட்சம் லிட்டரும் மற்றும் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உபபொருட்களை சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

பல வகையான பால் விற்பனை

மேலும் பொதுமக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கும் வகையில் ஆவின் நிருவாகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா தளங்களிலும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பொதுமக்களிடம் வரவேற்பு

இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த 09.05.2023 அன்று சென்னையில் விட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) (3.5%Fat & 8.5% SNF) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆவின் நிருவாகம் எல்லா காலகட்டங்களிலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

மறைமுக விலை உயர்வு... தனியாருக்கு சாதகம்; ஆவின் பச்சை பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தக்கூடாது! - அன்புமணி
 

click me!