அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்!

By Manikanda Prabu  |  First Published May 12, 2024, 5:31 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்


பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதற்காக அவரை கைது செய்யக் கோரி தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டு பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி. ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என பேசினார்.

Latest Videos

அண்ணாமலையின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தாம் பேசியது உண்மை எனவும், ஆங்கில இந்து நாளிதழ் 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதுகுறித்து செய்தி வெளியிட்டது என்றும் விளக்கம் அளித்தார். ஆனால், அண்ணாமலையின் கருத்து குறித்து விளக்கம் அளித்த தி இந்து நாளிதழ், “1956 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்திகளை ஆராய்ந்தால், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவின் நான்காவது நாளில் முத்துராமலிங்கத் தேவர் அண்ணாதுரையின் கருத்தில் முரண்பட்டார். ஆனால் அண்ணாதுரை வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை.” என விளக்கம் அளித்தது.

பிரிவினையை தூண்டும் பிரதமர் மோடி; தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி - துரை வைகோ காட்டம்!

அண்ணாமலையில் இந்த பேச்சின் மூலம் பொய்யான கருத்துக்களை பேசி பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக ஆளுநரிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரியிருந்தார்.

இதனையேற்று, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பதற்றத்தை உருவாக்குதல், பொய் செய்தி பரப்புதல் புகாரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

click me!