ஒன்றிய அரசு தக்காளி விலை உயர்வை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தக்காளி கிலோ ஒன்று ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் ஜூன் 24ஆம் தேதி கிலோ ஒன்றுக்கு ரூ.30-50 என விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.100 முதல் ரூ.180 வரை விற்கபடுகிறது. தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
தக்காளி விலை உயர்வால் உணவுப் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களில் தக்காளி நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 7 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களில் தக்காளி வாங்குவதையே நிறுத்தி விட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்காளியால் சில குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதாகம் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஒன்றிய அரசு தக்காளி விலை உயர்வை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வட மாநிலங்களில் பெய்துவரும் அதிகளவு மழை பொழிவு காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு இந்த விலை உயர்வை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவாகவே உள்ளது என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு தக்காளி பரிசளித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் - எங்கு தெரியுமா?
தக்காளி விலையை குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், தக்காளியை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகள் மூலமும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், நுகர்வோருக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய நகரங்களில் தக்காளியை கொள்முதல் செய்து தள்ளுபடி விலையில் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.