திருவள்ளூர் அருகே கோர விபத்து !! ஒரு கால் மட்டும் சாலையில்… இளைஞரின் உடல் எங்க கிடைத்தது தெரியும் ?

By Selvanayagam PFirst Published Jan 11, 2019, 7:25 AM IST
Highlights

திருவள்ளூர் அருகே விபத்தில் சிக்கி  இளைஞர்  பலியானார். விபத்து நடந்த இடத்தில் ஒரு கால் மட்டும்  கிடந்த நிலையில் அவரின் உடலை லாரி ஒன்று ஆந்திராவுக்கு இழுத்துச் சென்றது. இதையடுத்து  20 மணி நேரத்துக்கு பிறகு இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் இவருக்கு ரீனா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக சுதாகர் வேலை செய்தார்.

நேற்று முன்தினம் இரவு சுதாகர் வேலையை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அத்திப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் திருவள்ளூரை அடுத்த பாண்டூர் சாலையில் சென்றார்.



அப்போது சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி சென்ற லாரியை சுதாகர் முந்தி செல்ல முயன்றார். திடீரென எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக சுதாகரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்து ஏற்பட்டதும் டிரைவர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். மோட்டார் சைக்கிள் சாலையோரம் நசுங்கியபடி கிடந்தது. சுதாகரின் ஒரு கால் மட்டும் துண்டாகி அங்கு கிடந்தது.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சாலையில் துண்டான நிலையில் கால் மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுதாகரின் மோட்டார் சைக்கிளை வைத்து விபத்தில் அவர் சிக்கியதை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதனர்.

விபத்து ஏற்படுத்தியவர்கள் சுதாகரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றிருக்கலாம் என நினைத்து உறவினர்கள் திருவள்ளூரில் உள்ள ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக சென்று பார்த்தனர். ஆனால் அவர் எந்த ஆஸ்பத்திரியிலும் இல்லை. இது பற்றி அவர்கள் திருவள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் முட்புதர்களில் 3 கிலோ மீட்டர் தூரம் சுதாகர் உடலை தேடி சென்றனர். இருப்பினும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வழியாக கடந்து சென்ற வாகனங்களை கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் கார் மோதி விபத்துக்குள்ளான போது சுதாகரின் உடல் தூக்கி வீசப்பட்டு ஆந்திரா நோக்கி செல்லும் லாரியில் விழுந்தது பதிவாகி இருந்தது. இதற்கிடையே ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு லாரியை ஓட்டி சென்ற டிரைவர் மூட்டைகளை இறக்க முயன்றபோது அதன் மீது சுதாகரின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி அவர் ஆந்திர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மாலை 6 மணியளவில், அதாவது விபத்து நடந்து 20 மணி நேரத்துக்கு பிறகு சுதாகரின் உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

click me!