ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை. அப்படி ஒரு நடைமுறை வந்தால் அதை வரவேற்கவும், அங்கீகரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இறுதி கட்ட தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில்,வருகிற ஜூன் 1ம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இந்தியா கூட்டணி கட்சியினரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது தொடர்பாக திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அனைத்திந்திய பாங்க் ஆப் பரோடா ஓ.பி.சி. தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில், 8-வது 'ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம்' நடைபெற்றது.
தோல்வி பயத்தில் மோடி
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வரும் கருத்துக்கள் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துவதாக தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் தாலியை பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடுவார்கள்,அயோத்தி ராமர் கோவிலை இடித்து விடுவார்கள் என்றும் பா.ஜ.க.வினர் பேசி வருவது அவர்களின் பதற்றத்தைக் காட்டுகிறது. அடுத்தடுத்து அமித் ஷா போன்றவர்கள் பேசி வருகிற கருத்துகளையும் பார்த்தால் அவர்கள் ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பதட்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
ஆண்டுக்கு ஒரு பிரதமர்
எனவே ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கின்ற மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். மேலும் 'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார். 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்கப் போகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவ்வாறு இருப்பதில் என்ன தவறு? இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் கட்டுக்கோப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை. அப்படி ஒரு நடைமுறை வந்தால் அதை வரவேற்கவும், அங்கீகரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்தார்.
வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு... அறுவை சிகிச்சை - துரை வைகோ தகவல்!