தாமரை மலர்வதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை என தெரிவித்த திருமாவளவன், 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என உறுதியாக கூறினார்.
இருண்ட ஆட்சியின் கைப்பாவையாக ஊடகங்கள்
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் கருத்து கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதில் பாஜக வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்திருந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, கருத்து கணிப்புகளை ஒரு போதும் நான் பொருட்படுத்துவதில்லை. ஊடகங்கள் ஒரு சார்பாக செயல்படுகின்றன என்று இப்போது நாம் சொல்லவில்லை. தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
undefined
கடந்த 10 ஆண்டு கால இருண்ட ஆட்சி இந்தியாவை பாதாளத்தில் சரிய வைத்து இருக்கிறது. ஆனாலும் ஊடகங்கள் அந்த இருண்ட ஆட்சியின் கை பாவைகளாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன. கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கிற கசப்பான உண்மை. அது இன்றும் தொடர்கிறது நாளை மறுநாள் அதற்கு ஒரு முடிவு தெரியும். மக்கள் எழுதிய தீர்ப்பு 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது என தெரிவித்தார்.
தாமரை மலர வாய்ப்பே இல்லை
மேலும் இந்தியாவை சூழ்ந்த இருள் அகல இருக்கிறது, புதிய வெளிச்சம் பிறக்க உள்ளது. இந்தியா கூட்டணியின் ஆட்சி மலர உள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான புதிய விடியலாக ஜூன் 4-ம் தேதி நமக்கு மலர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. இந்த வெற்றிக்கு பின்னர் அது மேலும் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்திலும் தாமரை மலர வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் தாமரைக்கு வாய்ப்பே இல்லை, தாமரை மலர்வதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என உறுதியாக கூறினார்.
பிரதமர் வேட்பாளர் யார்.?
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றார் யார் பிரதமர் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி ஜனநாயகத்தை காப்பதற்காக உருவாகி இருக்கிற ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் ஒரு அணி, தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதிலும் ஒரு ஜனநாயக பூர்வமான புரிதல் இந்த 28 கட்சியின் உள்ளது. அதனால் தான் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே இந்த கூட்டணி அந்த தேர்தலை சந்தித்துள்ளது.
தேர்தல் வெற்றிக்கு பிறகு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும். அதற்கான கமிட்டி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதையும் தீர்மானிப்பதற்கு இடம் இருக்கிறது. யாவற்றையும் ஜனநாயக பூர்வமாக தீர்மானிப்போம் என்பது தான் இந்தியா கூட்டணியின் சிறப்பு அம்சமாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.