தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆளுநர்- தமிழக அரசு மோதல்
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்த மசோதாவை பல மாதங்கள் கிடப்பில் போட்டார். இதனையடுத்து மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நீட் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற பல மாதங்கள் கழித்து அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தால் தற்கொலை நிகழ்வுகள் நோள்தோறும் அதிகரித்தது.
ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனையடுத்து அரசியல் கட்சிகள் கண்டனத்தின் காரணமாக அந்த மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். இதே போல 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் நிராகரித்தாகவே அர்த்தம் எனவும் ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். இதுவும் அரசியல் வட்டாரத்தி் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலை தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
மசோதாவிற்கு ஒப்புதல் தராத ஆளுநர்
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட மசோதாக்களுக்கு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்