தமிழக சட்டப்பேரவையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜை சபாநாயகர் அப்பாவு கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை விளாசிய அமைச்சர்
சட்டப் பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பால்வளத்துறை விவாதத்திற்கு பதில் உரை அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தனது துறை மீதான கேள்விகளுக்கு விளக்கம் பதில் அளிக்காமல் பாஜகவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். 2024 தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவோம் இந்த நாட்டைப் பிடிப்போம்.
இந்த நாட்டினுடைய பெயர் இந்தியா என்பதை மாற்றுவோம் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் ஆட்சியைப் பிடிப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவற்றை எல்லாம் கையில் எடுத்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளான அமலாக்கத்துறை வருமானவரித்துறை சிபிஐ போன்ற அமைப்புகள் எல்லாம் எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுகின்றனர்.. என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேசி கொண்டிருந்தார்.
TN BJP: மணல் கடத்தல் கும்பலிடம் 80 கோடி சுருட்டிய பாஜக? குண்டை தூக்கி போடும் திருச்சி சூர்யா
எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்
மனித வள மேம்பாட்டில் இந்தியா 142 வது இடம், பொய் பிராச்சாரங்களில் இந்தியா முதல் இடம் என மனோ தங்கராஜ் பேசி கொண்டிருக்க உடனே பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குறுக்கிட்டார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அரசியல் மேடையில் பேசுவது போல் இங்கே பேச வேண்டாம். மூத்த அமைச்சர்கள் அணைவருக்கும் அரசியல் பேச நிறைய பாயிண்டுகள் இருக்கு. இருந்த போதும் துறையின் கருத்துக்களை தாண்டி பேசவில்லை.
நீங்களும் தேவையில்லாமல் சபை நாகரீகத்தை தாண்டி பேச வேண்டாம். பொய் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். நீங்கள் பேசியது அவை குறிப்பில் இடம் பெறாது என்று அமைச்சர் மனோ தங்கராஜை கண்டித்தார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பதற்றமான சூழல் உருவானது.