மரணத்திலும் அரசியல் செய்யும் இபிஎஸ்! முதல்வரை பாராட்ட வேண்டாம்! குறை சொல்லாமல் இருக்கலாம் இல்ல! ரஞ்சன் குமார்

By vinoth kumarFirst Published Jun 23, 2024, 7:32 AM IST
Highlights

எழவு வீட்டில் கிடைத்த வரை லாபம் என்ற பழமொழி போல், எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில்  கேவலமாக அரசியல் செய்கிறார். 

கள்ளக்குறிச்சி கொடூர சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே காரணம் என  காங்கிர1் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பட்டியலின மக்களே பெரும்பாலும் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அப்போதும் பட்டியலின மக்களே பெரும்பாலும் பலியானார்கள்.

Latest Videos

இதையும் படிங்க: Kallakurichi: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணத்திற்கு பின்னால் அண்ணாமலையின் சதி? ஆர்.எஸ்.பாரதி சந்தேகம்

இன்றைக்கு கள்ளக்குறிச்சி சம்பவத்தில் குடும்பத்தலைவரை இழந்து, பெற்றோரை இழந்து குழந்தைகள் தவிக்கின்றனர். இந்த சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே, ஆட்சியரை மாற்றம் செய்தும், எஸ்பி-ஐ சஸ்பெண்ட் செய்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணம். இதனை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு சார்பில் பாராட்டுகிறேன்.

மேலும் உண்மை நிலையைக் கண்டறிந்து தவறுகளைக் களைய விசாரணை ஆணையத்தையும் முதலமைச்சர் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. கள்ளச்சாராய  பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்புக் காட்டுவது இதன் மூலம் புரிகிறது. குழந்தைகளின் உயர் கல்விச் செலவையும், 18 வயது வரை பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது, அந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சமும் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் அறிவித்தார் முதலமைச்சர்.

சம்பவம் நடந்தது முதல் பாரபட்சமின்றி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கவனத்தில் கொண்டும் முதலமைச்சர் செயல்பட்டு வருவது அவரது தொடர் நடவடிக்கையின் மூலம் தெரியும். சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிக்க அழைத்தும் வராத எடப்பாடி பழனிசாமி, மரணத்திலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த போது, ஊடகத்தில் செய்தியைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்றவர் தான் இந்த பழனிசாமி. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது போன்ற சூழலில் அரசுக்கு பக்கபலமாக நின்று, சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டியது பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பணி.

அதேசமயம், சோகமான நிகழ்விலும்  அரசியல் செய்து பொறுப்பைத் தட்டிக்கழித்திருக்கிறார் பழனிசாமி. இந்த சம்பவத்துக்கு காவல் துறையே பொறுப்பு என்பதை உறுதி செய்து, எஸ்பி முதல் சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்த முதலமைச்சரை பாராட்ட வேண்டாம். அவரை குறை சொல்லாமலாவது இருக்க வேண்டாமா? கள்ளக்குறிச்சி சம்பவம் கண்டனத்துக்குரியது தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, மலிவான அரசியல் செய்வது முதலமைச்சராக இருந்த பழனிசாமிக்கு அழகல்ல. 

இதையும் படிங்க: Omeprazole – Fomepizole குழப்பத்தில் எடப்பாடி! விளக்கம் கொடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தந்தையை, பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இது தான் சிறந்த ஆளுமை கொண்ட அரசியல் தலைவருக்கான லட்சணம். சிறந்த சமூக சிந்தனை கொண்ட தலைவருக்கான உதாரணம். ஆனால், எழவு வீட்டில் கிடைத்த வரை லாபம் என்ற பழமொழி போல், எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில்  கேவலமாக அரசியல் செய்கிறார். 

பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு சார்பாக எங்களால் இயன்ற உதவிகளை வழங்க இருக்கிறேன். எனவே, இந்த இக்கட்டான சூழலில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி., எஸ்.டி., பிரிவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

click me!