மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைந்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சாதி வாரி கணக்கெடுப்பு
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 10.5 சதவகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த ஒரு சில மாதங்களில் நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திமுக அரசும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இடஒதுக்கீடு மசோதா கிடப்பில் இருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி திங்கட்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
ஸ்டாலின் தனித்தீர்மானம்
அப்போது, "சட்டப்படி மத்திய அரசுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்றும், சில புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது என்பதால், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கல்வி பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகள் இந்த அரச நிச்சயமாக எடுக்கும் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும் கேட்டுக்கொண்டார். இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்று பேசினார்கள்..இறுதியாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.