சாராயக் கடையை இடம் மாற்றுவதற்கு ரூ.5000 இலஞ்சம் வாங்கிய கலால் உதவி ஆணையர் கையும் களவுமாக பிடிபட்டார்…

First Published Oct 14, 2017, 9:01 AM IST
Highlights
The Assistant Commissioner of Excise who bribe 5000 rupees is arrested


காஞ்சிபுரம்

டாஸ்மாக் சாராயக் கடையை வேறு இடத்திற்கு மாற்றித் தர ரூ.5000 இலஞ்சம் வாங்கிய கலால் உதவி ஆணையர் கையும் களவுமாக இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் பிடிபட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கத்தை அடுத்த மின்னல் சித்தாமூரில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்றுள்ளது.

இந்தக் கடையின் மேற்பார்வையாளர் நிர்மல்குமார், இந்தக் கடையில் வியாபாரம் சரியில்லை என்பதால் இந்தக் கடையை காஞ்சீபுரத்திற்கு மாற்ற வேண்டும் என்று டாஸ்மாக் அலுவலகத்திடம் மனு கொடுத்தார்.

காஞ்சீபுரம் டாஸ்மாக் அலுவலகப் பொதுமேலாளர் காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தில் உள்ள மாவட்டக் கலால் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தார்.

கலால் உதவி ஆணையர் சீனிவாசன், நிர்மல்குமாரிடம் தன்னை வந்து பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி நிர்மல்குமாரும் அங்கு சென்றார்.

அப்போது, உதவி ஆணையர் சீனிவாசன், “காஞ்சீபுரத்திற்கு கடையை மாற்றினால் உனக்கு நல்ல வருமானம் வரும். நான் கடையை மாற்றித் தருகிறேன். அதற்கு ரூ.15 ஆயிரம் இலஞ்சம் கொடுக்க வேண்டும்” என்று வாய்கூசாமல் கேட்டுள்ளார்.

நிர்மல்குமாருக்கு இலஞ்சம் கொடுக்க விரும்பாததால் காஞ்சீபுரம் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இலஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரன் தலைமையில் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் ஆட்சியர் அலுவலக 2–வது மாடியில் உள்ள கலால் உதவி ஆணையர் அலவலகம் அருகே மறைந்திருந்தனர்.

அப்போது, ரசாயனம் தடவிய ரூ.5000-தை நிர்மல்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். அதை நிர்மல்குமார் உதவி ஆணையர் சீனிவாசனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் சீனிவாசனை பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்தனர்.

click me!