பாகிஸ்தான் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எல்லை கடந்த மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இதய நோயால் பாதிக்கப்பட்டு மாற்று இதயத்துக்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த 19 வயதான ஆயிஷா ரஷான் எனும் சிறுமிக்கு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருந்து விமானம் மூலம் வந்த 69 வயது மூளைச் சாவடைந்த நோயாளியின் இதயத்தை சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் அவருக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.
“இப்போது என்னால் எளிதாக சுவாசிக்க முடிகிறது.” என ஆயிஷா ரஷான் சந்தோஷமாக கூறுகிறார். கராச்சியில் தனது பள்ளிப் படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆடை வடிவமைப்பாளராக விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஏற்பட்ட ஆயிஷா முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையை சேர்ந்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் பரிந்துரைத்தார். தொடர்ந்து, மாநில உறுப்புப் பதிவேட்டில் காத்திருப்புப் பட்டியலில் ஆயிஷாவின் பெயர் சேர்க்கப்பட்டது.
இதனிடையே, மருத்துவர்கள் ஆயிஷாவுக்கு இடது வென்ட்ரிக்கிள் இரத்தத்தை பம்ப் செய்ய உதவும், இடது வென்ட்ரிகுலர் உதவி சாதன எந்திரத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் சென்ற ஆயிஷாவின் வலது பக்க இதயம் கடந்த ஆண்டு தோல்வியடைந்தது.
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம்: பெற்றோரிடம் அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி!
“என் மகள் அப்படி கஷ்டப்படுவதைப் பார்ப்பது மிகவும் பயமாக இருந்தது. நாங்கள் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகினோம். எங்களால் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்வது கடினம் என நாங்கள் அவரிடம் கூறினோம். ஆனால், அவர் எங்களை அவர் இந்தியாவுக்கு வரச் சொன்னார்.” என ஆயிஷாவின் தாயார் சனோபர் ரஷான் கூறினார்.
மருத்துவர் பாலகிருஷ்ணனின் குழு ஆயிஷாவின் பெற்றோரிடம் இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூறியுள்ளது. ஆனால், செய்வதறியாது ஆயிஷாவின் பெற்றோர் தவித்துள்ளனர். அந்த சமயத்தில் கடந்த ஜனவரி மாதம் ஆயிஷாவின் பெற்றோருக்கு இதயம் கிடைத்து விட்டதாக அழைப்பு வந்துள்ளது.
“நாடு முழுவதும் பெறுநர் இல்லாத போதுதான் வெளிநாட்டவர்களுக்கு இதயம் ஒதுக்கப்படும். மூளைச் சாவடைந்தவரின் வயது 60 என்பதால் பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயங்கினர். ஆனால், தானம் செய்தவரின் இதயம் நன்றாக இருந்ததாலும், இது ஆயிஷாவுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு என்பதாலும் நாங்கள் ரிஸ்க் எடுக்க முடிவு செய்தோம்.” என எம்ஜிஎம் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இயந்திர சுழற்சி ஆதரவு நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் கே.ஜி.சுரேஷ் கூறினார்.
ஆயிஷாவுக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் சாதனங்கள் அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். என்ஜிஓ ஐஸ்வர்யா டிரஸ்ட், முன்னாள் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களால் திரட்டப்பட்ட நிதியில் இருந்து ஆயிஷாவுக்கான மருத்துவ செலவுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.