மாணவி தற்கொலை..வீடியோ எடுத்தவரை தொந்தரவு செய்யக்கூடாது..நாளை பெற்றோர் ஆஜராக உத்தரவு

By Thanalakshmi VFirst Published Jan 22, 2022, 2:27 PM IST
Highlights

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் மருத்துவமனையில் மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த நபரை தொந்தரவு செய்யாமல், மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவியை அவர் தங்கியிருந்த விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்திய புகாரில் விடுதி வார்டன் சகாயமேரியை (62) போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியிருந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், பாஜகவினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற கிளையில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இறந்த மாணவியின் பெற்றோர் காணொலி காட்சி வழியாக நீதிபதி முன்பு ஆஜராகி கண்ணீர் விட்டனர். பின்னர், மனுதாரரின் மகள் விடுதி வளாகத்தில் இருந்த பூச்சி மருந்தை ஜன. 9-ம் தேதி குடித்துள்ளார். ஜன. 15-ல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் ஜன. 16-ல் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் வாக்குமூலம் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனில்லாமல் மாணவி ஜன. 19-ல் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சூழலில் மாணவி சிகிச்சையில் இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியுள்ளார். அதனால் சர்ச்சை எழுந்துள்ளது. மாணவியின் உடலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தடயவியல் மருந்து நிபுணர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.மாணவி விஷம் குடித்து இறந்ததாக கூறுகின்றனர். பாலியல் தொல்லை அளித்ததாக எந்த சந்தேகமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டியதில்லை. மாணவியின் உடலை அவரது பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கொண்டுச் சென்று இறுதி சடங்குகளை செய்ய வேண்டும். மாணவியின் உடலை தஞ்சாவூரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுச் செல்ல தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இறுதி சடங்கு விவகாரத்தில் போலீஸார் தலையிடக் கூடாது.மாணவியின் பெற்றோர் நாளை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட கவரில் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவமனையில் மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த நபரை தொந்தரவு செய்யாமல், மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

click me!