அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன
அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும் வருகிற 21ஆம் தேதி மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும், வருகிற 29ஆம் தேதியன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3ஆவது அலகு விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, அவர்களில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் என்பவரை தவிர மற்ற 6 பேர் மீதான குண்டாஸை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் ஆய்வு!
இந்த நிலையில், விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. தீட்சிதர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்த அக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கங்களின் தலைவர்கள் ஈசன் முருகசாமி, பி.அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதில், “போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வழக்கை திரும்பப் பெற அமைச்சர் எ.வ.வேலு மூலம், எம்எல்ஏ முன்னிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரிடம் பெறப்பட்டுள்ள உறுதிமொழிக் கடிதம் பெறப்பட்டுள்ளது ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் செயல். இதனை கண்டிக்கிறோம். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயிகளை வஞ்சிக்கும் உள்நோக்குடன் செயல்பட்ட அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ், எஸ்.பி. கார்த்திகேயன் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்பன உள்ளிட்ட தீர்மானங்க நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21ஆம் தேதி மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும், வருகிற 29ஆம் தேதியன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.