தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்… முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு…

First Published Jan 14, 2017, 7:55 AM IST
Highlights

தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்… முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு…

தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், தங்கள் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில், ஆயிரத்து 500 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 119 அலுவலர்கள், சிறைத்துறையில் முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை வார்டர்கள் 60 பேருக்கு "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க ஆணையிட்டுள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலிப் பிரிவு, நாய் படைப்பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர் என, ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 6 பேருக்கு, "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்கப்படுகிறது.

பதக்கங்கள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு, இதற்கென நடைபெறவுள்ள சிறப்பு விழாவில் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது

click me!