Anbumani : கப்பல் மோதி தமிழக மீனவர் கொலை..! இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்திடுக- அன்புமணி

By Ajmal KhanFirst Published Aug 1, 2024, 12:13 PM IST
Highlights

இலங்கை கடற்படை வீரர் இறப்பிற்கு  பழிவாங்கும் நோக்கத்துடன் தான் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதித் தாக்கியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 
 

மீனவர்கள் மீது மோதிய கப்பல்

இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் நெடுந்தீவு  அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதி தாக்கியதில், படகு கவிழ்ந்து அதில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்திருக்கிறார். படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த மூக்கையா, முத்து முனியாண்டி, இராமச்சந்திரன்  ஆகிய மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  

Latest Videos

ராமேஸ்வரம் மீனவர் பலி

தமிழக மீனவர்கள் மீது  இலங்கை கடற்படைக் கப்பல் மோதிய நிகழ்வை விபத்தாக பார்க்க முடியாது. அதை திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும் தான் பார்க்க வேண்டும். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து  10 மீனவர்கள்  கடந்த ஜூன் 23ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர்  தங்கள் படகை மோதினர். ஆனால், அதில் சிங்களக் கடற்படை படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தான் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதித் தாக்கியுள்ளனர்.  இதை மத்திய, மாநில அரசுகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கொலை வழக்கு பதிந்து கைது செய்திடுக

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மின் பிடித்து வந்த பகுதிகளில் தொடர்ந்து மீன் பிடிப்பதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால், தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்ததாக கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையை செய்து வந்த சிங்களக் கடற்படை, இப்போது மிருகத்தனமாக  தமிழக மீனவர்களின் படகு மீது மோதி மீனவர்களை படுகொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறது.

இதற்கு காரணமான சிங்களப் படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதையும்,  கொலை செய்யப்படுவதையும்  மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார். 

வார விடுமுறை, ஆடி அமாவசைக்கு வெளியூர் செல்லனுமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?

click me!