தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 இல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போன்று அல்லாமல் பாட்னா கூட்டம் ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் ஆத்மி கட்சி மட்டும் பிடிகொடுக்காத நிலையில், மற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டாக தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி, பாஜகவுக்கு வெற்றியையே தேடித் தரும் என்பதால், அக்கட்சியையும் இணைத்த ஐக்கிய கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி படு வீக்காக இருப்பதால், அதற்கு புத்துயுர் ஊட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி, டெல்லி, குஜராத், ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், காங்கிரஸ் கட்சி சிறிய மறு சீரமைப்பை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்றும் பரிசீலனையில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிடியின் தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே உலா வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அக்கட்சி கணிசமான இடங்களை பெற்றது. வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளை தமிழ்நாட்டில் பெற்றதால், கே.எஸ்.அழகிரியை மாற்ற டெல்லி தலைமைமை பரிசீலிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2024 தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு உள்பட நான்கு மாநிலங்களில் தலைவர்களை மாற்றவும், அகில இந்திய அளவில் நிர்வாகிகள் சிலரை மாற்றவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நியமனங்கள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்துக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோஷ்டி அரசியலுக்கு பெயர் பெற்ற தமிழக காங்கிரஸில் இருக்கும் முன்னாள் தலைவர்கள், இந்நாள் இளம் தலைவர்கள் என பலரும் கே.எஸ்.அழகிரியை மாற்றி விட்டு தங்களை நியமிக்க வேண்டும் என டெல்லிக்கு கடந்த சில மாதங்களாக நேரடியாகவே அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தலைவர் மாற்றம் தொடர்பாக ஏற்கனவே விளக்கமளித்துள்ள கே.எஸ்.அழகிரி, யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்புள்ளது, நானே தொடரவும் வாய்ப்புள்ளது என்றவர், தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். நேற்று மாலை டெல்லி சென்ற அவர், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தலைவர் பதவியை பெற அதிக முனைப்பு காட்டி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் இன்று காலை டெல்லி சென்றுள்ளார். அவர் ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளதாக தெரிகிறது.
ரஷ்யாவில் தணிந்தது பதற்றம்: வாக்னர் குழுவுடன் சமாதானம் - முழு விவரம்!
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். என்னிடம் உறுதியான திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள எனக்கு நேரமும் சக்தியும் உள்ளது.” என தெரிவித்துள்ளார். அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்வேன் என்று தலைமைக்கு உறுதியளித்துள்ளதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து தலைமை பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.அழகிரியின் முகாமோ தலைமை மாற்றத்தை வதந்தி என்கின்றனர். “கொஞ்ச நாளாகவே இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு மாற்றம் நடந்த போது, தமிழகத்திற்கு மட்டும் ஏன் தலைமை மாற்றத்தை டெல்லி மேலிடம் அறிவிக்கவில்லை” என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.
கே.எஸ்.அழகிரி, கார்த்தி சிதம்பரம் தவிர கரூர் எம்.பி., ஜோதிமணி, கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிடி மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோரும் ரேஸில் உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து சசிகாந்த் செந்தில் கூறுகையில், “நான் ரேஸில் இருக்கிறேனா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. டெல்லியில் உள்ள கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரை ஜோதிமணி அந்தப் பதவிக்கு வலுவான போட்டியாளர்.” என தெரிவித்துள்ளார்.