12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். வினாத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10 முதல் 21 வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடந்ததால் மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு மே 8-ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி 8,03,385 தேர்வர்கள் தேர்வு எழுதியதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும். மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவிகள் 4.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரம் 86.69% தேர்ச்சி விகிதத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க : TN 12th Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகளை ஓவர்டேக் செய்தார்களா மாணவர்கள்?
கடந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் 93.76% பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 94.03% ஆக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழில் 2 மாணவர்களும், ஆங்கிலத்தில் 15 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதே போல் இயற்பியலில் 812 மாணவர்களும், வேதியியலில் 3,909 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். உயிரியலில் 1490 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணினி அறிவியலில் 4,618 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனினும் இதில் 47,934 பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஒரு சிலர் ஒரு பாடங்கள், ஒரு சிலர் 2 அல்லது 3 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து, துணை தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வி தொடரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை தேர்வுகளுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த விருதுநகர்! கடைசி இடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?